கூடலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சிக்குள்பட்ட எருமாடு பகுதியில் மருத பிள்ளை என்பவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தனது மகன்களுடன் தேயிலை விவசாயம் செய்து குடும்பத்தை நடத்திவந்தார். இதில் அவரது மகன்கள் படித்து, தற்போது சென்னையில் பெரிய தொழில் அதிபராக உள்ளனர்.
இதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுவந்த மருத பிள்ளை, ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருக்கும் நிலையில் பல விவசாயிகள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி பூச்சி மருந்து தெளிப்பது, உரங்கள் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை கூடலூர் பந்தலூர் தாலுகாவில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத பிள்ளையும் இந்த நோயால் இறந்தது அவரது மகன் மகேந்திரன் மற்றும் குடும்பத்தினரிடயே சோகத்தை ஏற்படுத்தியது.
தற்போது அந்தப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக வீட்டுக்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு தனியார் அமைப்பு மகேந்திரனிடம் நேரடியாகச் சென்று கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதியில் அதிகளவிலான புற்றுநோய் நோயாளிகள் இருப்பதாகவும் அவர்களுக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்று சிகிச்சை அளிக்க போதுமான வசதி இல்லை என்றும் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அவசர ஊர்தி இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனைக்கேட்ட மகேந்திரன் தனது கிராமத்தில் தந்தை போல் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவசர ஊர்தி ஒன்றை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.
இது பற்றி கூறிய மகேந்திரன் தனது தந்தை போல் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நோய் வருவதைக் கண்டறிய சிறப்புக் குழுக்கள் அமைத்து ஆராய வேண்டும் எனவும் சிறு குறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்பாக தனது விவசாயத்தை செய்ய அரசு முன்னுரிமை அளித்து வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தனது கிராமத்திலும் தனது ஊரிலும் மருத்துவத் தேவைக்காக என்ன உதவிகளை செய்ய முடியுமோ அவ்வளவு உதவிகளையும் செய்ய நான் தயாராக உள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க...வாழைப்பழத்தில் ரசாயன திரவியம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?