நீலகிரி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஃபைசல் அகமது மற்றும் சணர் அகமது ஆகிய 2 தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் ஒரே காரில் நேற்று உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஹைதராபாத்திற்கு செல்ல உதகையிலிருந்து உல்லத்தி வழியாக சென்றுள்ளனர்.
அப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், தாழ்வான மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய 7 மாத கைக்குழந்தை மற்றும் 6 வயது சிறுவன் உட்பட இரு தம்பதியினரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 6 வயது மிக்க சிறுவன் அகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த 2 தம்பதியினருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கிய 7 மாத கைக்குழந்தை காயங்கள் எதுவும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் முழு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் சிலர் அத்திக்கல், உல்லத்தி வழியாக அத்துமீறி செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால், காவல் துறையினர் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 உயிர்களை பலிவாங்கிய யானையை பிடித்த வனத்துறை.. வேலூரில் நடந்தது என்ன?