நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா மழவன், சேரம்பாடி பகுதியில் டிசம்பர் 13ஆம் தேதி தந்தை, மகன் உட்பட மூன்று பேரைக் கொன்ற ஆட்கொல்லி யானை சங்கரை பிடிக்க வலியுறுத்தி மூன்று மாநில எல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, டிசம்பர் 15ஆம் தேதி யானை சங்கரை பிடிக்க முயன்றபோது சங்கர் யானை கேரளாவுக்கு தப்பிச் சென்றது.
இந்நிலையில், 5 கும்கி யானைகள், 50க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர் 4 கால்நடை மருத்துவ குழு ஒன்றிணைந்து கேரளாவிலிருந்து சேரம்பாடி பகுதிக்கு வந்த சங்கர் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இன்று (பிப்.12) பிற்பகல் சப்பந்தோடு பகுதியிலிருந்து யானை சங்கருக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
அப்போது, யானை சங்கருடன் இருந்த இரண்டு பெண் யானைகள், ஒரு குட்டியும் பட்டாசு வெடித்து விரட்டப்பட்டது. பின்பு, கும்கி யானை உதவியுடன், சங்கர் யானையின் காலில் கயிறு கட்டி வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சங்கர் யானை, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்போம் முகாமில், சங்கர் யானைக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கரோலில் ( மரகூண்டு) அடைத்து பயிற்சி அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்கொல்லி யானை சங்கரைப் பிடிக்கும் பணி தீவிரம்