நீலகிரி: கீழ்கோத்தகிரி மற்றும் குன்னூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளில் கடந்த 2019ஆம் ஆண்டு மேலாளராகப் பணியாற்றியவர், அனூஜ்குமார். அங்கு, உதவி மேலாளராக ஜெயராமன் மற்றும் உதகை வனச்சரகராக கணேசன் ஆகியோர் பணியாற்றினர். இவர்கள், மத்திய அரசின் கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் வாங்கித் தருவதாகப் பல்வேறு விவசாயிகளிடம் ஆசை வார்த்தைக் கூறினர்.
மேலும் வங்கியில் வாங்கப்படும் கடனில் மூன்றில், இரண்டு பங்கை தாங்கள் வைத்துக்கொள்வதாகவும், ஒரு பங்கை மட்டும் விவசாயிகளுக்கு கொடுப்பதாகவும் மூன்று பங்கையும் தாங்களே செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய 24 விவசாயிகள், தங்களது வீடு மற்றும் நிலத்தின் ஆவணங்களை வழங்கி உள்ளனர். அந்த ஆவணங்களின் மூலம் குன்னூர் வங்கியில் 24 விவசாயிகளின் பெயரில் ரூபாய் 50 லட்சமும், கீழ் கோத்தகிரி வங்கியில் ரூபாய் 3 கோடியே 25 லட்சமும் என ரூபாய் 3.75 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
வங்கி மேலாளர், உதவி மேலாளர் மற்றும் வனச்சரகர் அந்தக் கடனை கட்டி விடுவதாகக் கூறி இருந்ததால், கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் அந்தக் கடனை கட்டவில்லை. அதே சமயத்தில் வங்கி மேலாளர்கள் மற்றும் வனச்சரகரும் அந்தக் கடனை கட்டவில்லை. மானியத்துடன் வழங்கப்பட்ட அந்த விவசாயக் கடனை அந்த 24 விவசாயிகளும் திருப்பிச் செலுத்தாத நிலையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்துமாறு 2021ஆம் ஆண்டு வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்போதுதான் இந்த மோசடி குறித்த விவகாரம் அம்பலமானது.
இதன் பின்னர் 2021ஆம் ஆண்டு வங்கி நிர்வாகம் சார்பாக நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் குமார், ஆய்வாளர் அம்சவேணி தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் ஜெயராமன் மற்றும் கடன் வாங்கிய பாபு, ஆல்துரை, பிரியா, பிரகாஷ், பரமேஷ், பூபதி, ராமகிருஷ்ணன், ஜெயபால், செவணன், ராஜா, சேகர், மகேஸ்வரி உள்பட 13 பேரை காவல் துறையினர் நேற்று (ஜூன் 23) கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மேலாளர் அனூஜ்குமார், முன்னாள் உதகை வனச்சரகர் கணேசன் உள்ளிட்ட 11 பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்தச் சம்பவத்தில் வங்கி உதவி மேலாளர் ஜெயராமன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: 29 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு