நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர், கோத்தகிரி சாலையில் வண்டி சோலை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த குன்னூர் தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் அதிகமாக மேக மூட்டங்கள் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்லவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்ல வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பந்தலூர் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.