உதகை நகரில் யூகலிப்ட்ஸ், அக்கேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த அன்னிய நாட்டு மரங்களால் நிலத்தடி நீர் குறைந்து வருவதுடன், இயற்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே யுகலிப்டஸ் போன்ற வெளிநாட்டு மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி பலத்த காற்று வீசி வருவதால் பல அடி உயரம் கொண்ட ராட்சச மரங்கள் சாலைகளின் குறுக்கே விழவும், வீடுகளின் மீது விழந்து பெரும் சேதத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் அச்சத்துடன் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உதகை நகரின் முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், குடியிருப்பு பகுதியிலும் உள்ள ராட்சச மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வீட்டிற்கு அருகே உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் வனப்பகுதியில் உள்ள மரங்களை மட்டும் வெட்ட நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.