நீலகிரி: மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புலி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, இரண்டு ஆண்களை அடித்துக் கொன்றது.
மேலும் அந்தப் பகுதி பொதுமக்கள் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட கால்நடைகளையும் புலி வேட்டையாடியது. இதனைத் தொடர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவுசெய்த வனத் துறையினர், அதனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
முதியவரைக் கொன்ற புலி
தேடுதலின்போது புலியானது வனத் துறையினரின் கண்களுக்குப் பலமுறை தென்பட்டபோதும், அடர்ந்த புதர்களில் மறைந்துகொண்டு வனத் துறையினருக்குப் போக்குக்காட்டிவந்தது.
இந்நிலையில் இன்று (அக். 1) காலை தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினகுடிக்கு நகர்ந்த புலி, அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த மசினகுடி பொதுமக்கள், புலியைச் சுட்டுப்பிடிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இரவில் வெட்டியான் - பகலில் ஆசிரியர்: கடுமையாக உழைக்கும் பட்டதாரி இளைஞர்