நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராமசாமிக்கு ஆதரவாக, அக்கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உதகையில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு, மக்கள் ஆதரவு இல்லாததால் பரப்புரைக்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்வதாகவும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், வருமான வரித்துறை சோதனை செய்வது தவறில்லை. ஆனால் எதிர்கட்சியினரை மட்டும் குறி வைத்து சோதனை நடத்துவதுதான் தவறு என்றார்.
மேலும், துரைமுருகன் வீட்டில் பணம் பிடிப்பட்டுள்ளதற்கான வீடியோக்கள் வெளியாகி உள்ளதாகவும், உளவுத்துறை மூலம் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் பணம் வைத்து அதனை பறிமுதல் செய்த பின், சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலை நிறுத்த மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.