நீலகிரி: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில், ஒரு பெண் சிங்கம் உயிரிழந்ததைத் தொடர்ந்து நீலகிரி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று வளர்ப்பு யானைகள் முகாமை ஆய்வு செய்த புலிகள் காப்பக கள இயக்குநர் கௌசல், வளர்ப்பு யானைகள் முகாமில் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனச்சரகர், கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கௌசல், "வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டுள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை.
காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்கும் நேரம் 2 மணி நேரமாக அதிகரிக்கபட்டுள்ளது. மேலும், யானை பாகன்கள், உதவியாளர்கள், முகாமில் பணிபுரியும் வனத்துறை ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
வரும் நாட்களில் வெளியாட்கள் முகாமிற்கு வர அனுமதி கிடையாது. மேலும், முவன விலங்குகளுக்கு இருமல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. இதனிடையே முதுமலை, டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு எங்களுக்கு ஜாலிதான்: சாலைகளில் ஹாயாக சுற்றித் திரியும் யானைகள்