கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக சயான் காவல்துறையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், தீபு, மனோஜ் சாமி உள்பட 3 பேர் தரப்பில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 15 பேரை விசாரிக்க அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதனிடையே, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மட்டுமே ஆஜரானார்.
ஆனால் நீதிமன்றக் காவலில் குன்னூர் சிறையில் உள்ள வாளையாறு மனோஜை காவல் துறையினர் ஆஜர்படுத்தவில்லை. அதற்கான காரணத்தையும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. காவல் துறையினரின் இச்செயலை நீதிபதி கடுமையாக கண்டித்தார்.
இதனையடுத்து, நேற்று மதியம் குன்னூரிலிருந்து வாளையாறு மனோஜை காவல் துறையினர் பாதுகாப்பாக உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு ரகசியமாக அழைத்து வந்தனர். அதன்பின், நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்னர், மீண்டும் குன்னூர் சிறைக்கு அழைத்து சென்றனர்.
இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வாளையாறு மனோஜை காவல் துறையினர் வழக்கு நடைபெறும் போது ஆஜர்படுத்தாமல், விசாரணை முடிந்த பின் தனியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு