நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் இயற்கை, வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதென 21 பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சோதனைகள் நடைபெற்று, பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்னூர் பகுதிகளான டார்லிங்டன் பிரிட்ஜ், பந்துமை, வண்டிச்சோலை, டால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், உணவுக் கழிவுகள், மது பாட்டில்களை லாரிகள் மூலம் வனப்பகுதிகளில் கொட்டிவிட்டுச் செல்வதால், அங்கு சுற்றித் திரியும் காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட வன விலங்குகள் அதனை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றிற்கு வயிற்றில் ஜீரண உறுப்பு பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மது பாட்டில்களும் வனங்களில் வீசி எறிந்து செல்லப்படுவதால் அவை உடைபட்டு வனவிலங்குகளின் கால்களில் காயம் ஏற்படுத்தி, உணவு தேடிச் செல்ல முடியாமல் பரிதாபமாக உயிரிழக்கின்றன. இது குறித்து குன்னூர் வனத் துறையினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக வனங்களில் லாரிகள் மூலம் கொட்டப்படும் கழிவுகளை தடுத்து நிறுத்தி வனங்களைக் காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.