நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தியல் வார நிறைவு விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பேராசிரியர். கே. சின்னசாமி, மருத்துவர் எம். ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் பேசியதாவது, 'இந்தியாவில் ஒரு பெரிய மருத்துவமனை அமைக்க தேவைப்படும், மொத்த பட்ஜெட்டில் சுமார் 60 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கே செலவிடப்படுகிறது.
பெரும்பாலும் மருந்து மூலப்பொருட்கள் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அவை மாத்திரைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிலை மாறவேண்டும். அதற்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் சார்ந்த தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே வளர வேண்டும்' என்றார்.
இதன் பின்னர் பேராசிரியர் கே. சின்னசாமி பேசுகையில், ' இந்தியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 கல்லூரிகள் பார்மசி துறையில் நான்கு வருட இளநிலை பட்டப் படிப்பையும், சுமார் 400 கல்லூரிகள் பார்ம் - டி எனப்படும் ஆறு வருட முதுநிலை பட்டப்படிப்பையும் வழங்குகிறது.
பல தனியார் மருத்துவமனைகள் பார்ம் - டி பட்டதாரிகளை பணியமர்த்தி அவர்களின் சிறப்பு சேவைகளை நோயாளிகளின் சேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இதுபோன்று வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளாட்பாரத்தில் தங்கி வீடு, கடைகளை நோட்டமிட்டு திருட்டு: சிசிடிவியால் போலீசில் சிக்கிய கும்பல்!