நீலகிரி: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட் மற்றும் பரிசுப் பொருட்களை தங்களுக்குப் பிடித்தவர்களுக்குப் பரிசளித்து மகிழ்வார்கள். 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் ஊட்டி, குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு காதலர் தினத்தன்று காதலர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
மேலும் புதிதாக திருமணமான தம்பதிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள். உதகை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காதலர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர்கள் மற்றும் கொய்மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காதலர் தினத்தையொட்டி குன்னூரில் உள்ள மலர் விற்பனையகங்களில் ரோஜா பூக்கள், கார்னேசன், லில்லியம், புளுடைசி, ஜெர்புரா, ஆர்கிட் மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு ரோஜா பூ ஒன்று ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நீலகிரியில் விளையும் லில்லியம், ஜெர்பரா, கார்னேஷன் கொய்மலர்களுக்கு தற்போது விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட லில்லியம் கொய் மலர்கள் தற்போது 10 பூக்கள் அடங்கிய ஒரு கொத்து ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரியில் உற்பத்தியாகும் இவ்வகை மலர்கள் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் பயன்பட்டு வந்தது. ஆனால், தற்போது காதலர் தினத்தில் பரிசளிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் இந்த மலர்களின் விலை உயர்ந்துள்ளது. இவ்வகை பூக்கள் தற்போது பல்வேறு வகையான பூங்கொத்துக்கள் தயாரிப்பதற்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூரிலும் இந்த பூக்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வகை மலர்கள் சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்டப் பகுதிகளுக்கு கொண்டு சென்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Valentines Day: கொடைக்கானலில் கார்னேஷன் பூக்களின் விலை அதிகரிப்பு!