நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில் கடந்த 25 நாள்களாகக் காட்டு யானைகள் அவ்வப்போது கடைகள், வீடுகளைத் தாக்குவதுடன் உணவுப் பொருள்களைச் சேதப்படுத்தியது. இந்நிலையில், கக்காச்சி, மேல் பாரத்நகர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள், வாழை மரங்கள், மேரக்காய் செடிகளைத் தொடர்ந்து நாசப்படுத்திவருகிறது. இதேபோன்று அதிகாலையில் கக்காச்சி கிராமத்தில் குடியிருப்பையும் சேதப்படுத்தியது.
இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, இப்பகுதியில் உள்ள மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த வனத் துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலரும், பேருந்துகள் இல்லாத காரணத்தால் நடந்தே பள்ளிக்குச் சென்றனர். அரசுப் பேருந்துகள் உள்பட பல வாகனங்களை நிறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் கோயில் யானை: மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல்