நீலகிரி: உதகையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில், தினந்தோறும் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றும் (ஜூன் 21) 100 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் இருந்துள்ளது.
ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதையடுத்து தடுப்பூசி போட்டுகொள்ள சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,
“மருத்துவமனை ஊழியர்கள் முறையாக டோக்கன் வழங்காமலும், தடுப்பூசி இருப்பு குறித்து தெரிவிக்காமலும் தங்களை நீண்ட நேரமாக காத்திருக்க செய்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு தடுப்பூசி போட்டு, பொதுமக்களை அலைகழிப்பதாக” குற்றம்சாட்டினர்.
இதையடுத்து வரிசையில் நின்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கபட்டு இன்று (ஜூன் 22) தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் திரும்பி சென்றனர்.
இதையும் படிங்க: வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர்!