நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மார்லிமந்து அணைப்பகுதி அருகே புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்துவருகின்றன. இந்நிலையில் முதுமலைப் புலிகள் காப்பக வனப்பகுதியில் வாழக்கூடிய அரியவகை செந்நாய்கள் தற்போது மார்லிமந்து வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக முப்பது செந்நாய்கள் அடங்கிய கூட்டமானது கடமான்களை தினமும் வேட்டையாடிவருகின்றன. கடந்த பத்து நாள்களில் மட்டும் இருபத்தைந்து கடமான்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. இதனால் அணையின் கரை ஓரத்தில் ஏராளமான எலும்புக் கூடுகள் குவிந்து கிடக்கின்றன.
வேட்டையாடப்பட்ட சில கடமான்களின் உடல்கள் தண்ணீரில் கிடப்பதால் நீர் மாசடைவால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் உள்பட கிராம மக்களும் தாக்கப்படும் அபாயம் உள்ளதால் வனத் துறையினர் தொடர்ந்து செந்நாய்களைக் கண்காணிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : 2 லட்சத்தைக் கடந்த கரோனா உயிரிழப்புகள்