நீலகிரி: உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அதில் 33ஆவது வார்டு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் அங்கு மக்கள் அதிகமாகப் பயன்படுத்திவரும் ஹெச்.எம்.டி. - நொண்டிமேடு சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது.
மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதால், சில சமயங்களில் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்குப் புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, உடனடியாக சாலையைச் சீரமைத்துத் தரக்கோரி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: ஆடு மேயும் இடமாக மாறிய அரசுப் பள்ளி வளாகம்