நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். இந்த பகுதிகள் 40% வனப்பகுதியாக உள்ள நிலையில் வருடந்தோறும் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வண்ணம் உள்ளது. இதில் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நல்ல மழை பெய்து செடி, கொடிகள் பசுமையாக உள்ள நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் உள்ளன.
தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் இல்லாததால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்கின்றன.
இந்நிலையில், நேற்று காலை ஆமை குளம் பகுதிக்கு வந்த இரண்டு யானைகள், அங்கிருந்த பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை சேதப்படுத்தின. அப்போது வீட்டில் உள்ளே உறங்கி கொண்டிருந்த அவர்கள் சுதாரித்து கொண்டு வெளி வந்துள்ளனர். பின்னர் ஊர் மக்கள் ஒன்றுகூடி யானையை விரட்டி அடித்தனர்.
அதுமட்டுமின்றி அருகிலிருந்த வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தின. ஏற்கனவே கரோனா தொற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யானைகளீன் அட்டகாசத்தால் மேலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதென மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு