நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பிதர்காடு பகுதியில் அதிக விலையுள்ள ராட்சத மரங்கள் உள்ளன. இவற்றில் வனத்துறை, வருவாய்த் துறை கட்டுபாட்டில் உள்ள பிரிவு 17ஆவது நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இரவு நேரங்களில் கேரளாவிற்குக் கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் பந்தலூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட மரங்கள் கேரள மாநிலம் பத்தேரியில் உள்ள ஒரு தனியார் மர ஆலையில் விற்க்கபட்டதாகத் தெரியவந்தது.
அங்கிருந்து மரங்களைப் பறிமுதல் செய்து லாரிகள் மூலம் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்த அலுவலர்கள், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளையில் வனத்துறைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.