மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், இருளர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களில் தோடர் பழங்குடியின மக்கள் 60 மந்துகள் எனப்படும் கிராமங்களில் வாழ்ந்துவருகின்றனர். நீலகிரியில் மட்டுமே இந்தப் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரியமும் பழமையும் மாறாமல் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கும், தாங்கள் மேற்கொள்ளும் விவசாயம், கால்நடைகளுக்கும் சிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக 'மொற்ட்வர்த்' என்று அழைக்கப்படும் விழாவை ஜனவரி மாதத்தில் கொண்டாடிவருகின்றனர.
இந்நிலையில், உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் 'மொற்ட்வர்த்' திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் 60 மந்துகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடையணிந்துவந்து கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தங்களது மேலாடையின்றி அங்குள்ள 'முன்போ' என்று அழைக்கப்படும் கூம்பு வடிவிலான குல தெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து, அதன் அருகிலுள்ள 'அடையாள்வேல்' என்றழைக்கப்படும் பிறை வடிவிலான கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தி இந்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, 15 குலத்தைச் சார்ந்த ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். இறுதியாக தோடர் இன இளைஞர்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தும்வகையில் இளவட்ட கல்லையும் தூக்கி பலத்தை காண்பித்தனர். இந்த விநோத விழாவினை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.
இதையும் படிங்க: