நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையைச் சுற்றிப்பார்க்க ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
கோடைவிழாவின் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடத்தப்படும். ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா ரத்து செய்யப்பட்டதால் மலர்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு: ஆனால், தற்போது கரோனா தொற்று குறைந்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கபட்டதை அடுத்து, இந்தாண்டு உதகையில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (மார்ச் 25) உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர். பிருந்தா தேவி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவல் துறை, போக்குவரத்துத்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், கோடை விழா நிகழ்ச்சிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
தேதிகள் அறிவிப்பு: அதன்படி வரும் மே 7, 8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 11ஆவது காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்குகிறது. இதையடுத்து, மே 13, 14, 15 தேதிகளில் கூடலூரில் 9ஆவது வாசனை திரவியக் கண்காட்சியும், மே 14, 15 தேதிகளில் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 17ஆவது ரோஜா கண்காட்சியும் நடைபெறுகிறது.
அவற்றைத்தொடர்ந்து, உதகை தாவரவியல் பூங்காவில், பிரசித்திபெற்ற 124ஆவது மலர்க் கண்காட்சியை மே 20, 21, 22, 23, 24ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கோடை விழாவின் இறுதியாக மே 28, 29 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62ஆவது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: குல தெய்வ வழிபாடு.. பாரம்பரிய நடனம்.. சித்த ராமையா அசத்தல்!