கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்திற்கு இரவில் சென்று அரசுக்கு எதிராக கூட்டம் கூட்டி மக்களிடம் பேசியது, அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக, கொலகொம்பை காவல் நிலையத்தில் கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் டேனிஸ் (எ)கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொலக்கொம்பை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரிக்க மாவோயிஸ்ட் டேனிஸ் கேரளாவில் இருந்து உதகைக்கு பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி, கொலகொம்பை காவல்துறையினர் டேனிஸைக் கைது செய்து, செப்டம்பர் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய கொலகொம்பை காவல்துறையினர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையல், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்யவும், வெள்ளிக்கிழமை
மாலை 7 மணிக்கு மீண்டும் டேனிசை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் உத்திரவிட்டார்.
நீதிமன்றத்திற்கு உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும் வளாகத்தில் மாவோயிசம் ஜிந்தாபாத். ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத், இந்து துவ கார்ப்பிரேட்டுக்கு எதிராக போராடுக, தொழிலாளர்களே போராடுக என டேனிஸ் கோஷம் எழுப்பினார்.