ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்ட வனப்பகுதி முழுவதும் யுகலிப்டஸ், அக்கேசியா போன்ற வெளிநாட்டு மரங்கள் நடப்பட்டன. நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சும் இந்த மரங்களால் வனப்பகுதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருவதாக அப்பகுதியின் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மரங்களால் மழைப்பொழிவும் ஆண்டிற்கு ஆண்டு குறைந்து உள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு மரங்களான சில்வரோக், யுகலிப்டஸ், அக்கேசியாவை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே வெளிநாட்டு மரங்கள் வெட்டும் இடத்தில் சோலை மரங்களை நட்டு வனப்பகுதியை அதிகரிக்கும் புதிய திட்டத்தை நீலகிரி மாவட்ட நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளது. வனத் துறையினர், கல்லூரி மாணவர்கள் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தை உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தார்.
முன்னதாக மரம் நடுவது குறித்த உறுதிமொழியை அப்பகுதி தோடர் இன ஆதிவாசி மக்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள் உள்பட அனைவரும் எடுத்துக் கொண்டனர். முதற்கட்டமாக மழைப்பொழிவை அதிகரிக்கும் 200 சோலை மரங்கள் நடப்பட்டன. இத்திட்டத்தின்படி தொடர்ந்து சோலை மரங்கள் நடவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.