நீலகிரி: உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையிலுள்ள கோடப்பமந்து பகுதியில் நேற்று (பிப்.19) நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிலர் குப்பைகளை முறையாக பிரித்துக் கொட்டமல் மக்கும், மக்காத குப்பைகள் இரண்டையும் ஒன்றாக கொட்டியுள்ளனர்.
அதனைப் பணியிலிருந்த தூய்மைப் பணியாளர் கோவிந்தராஜ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரி, கோவிந்தராஜை தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த கோவிந்தராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரி மீது பி1 காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து இன்று(பிப்.20) காலை முதல் உதகை நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்கு முன்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தால் உதகை நகராட்சியில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'அது நானில்லைங்க': சசிகலாவிற்கு ஆதரவு சுவரொட்டிக்கு மறுப்பு சுவரொட்டி!