நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற சிறப்பைப்பெற்றது இந்த மலை ரயில். ஊட்டி - குன்னூர், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டிவருவது வழக்கமான ஒன்று. நீலகிரி வரும் சர்வதேச அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலை ரயிலில் பயணிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில் முதன்முதலில் ஆங்கிலேயர் காலத்தில் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு 1908ஆம் ஆண்டு குன்னூரிலிருந்து உதகை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரயில் போக்குவரத்தை மெட்ராஸ் ரயில் கம்பெனி மூலம் ஆங்கிலேயர்கள் இயக்கிவந்தனர். உயர்ந்த மலைச் சிகரங்களில் வளைந்து நெளிந்துவரும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில் ஆகும். இந்த மலை ரயிலுக்குப் பெருமைசேர்க்கும்-விதமாக 2005ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தகுதி வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 46 கிலோமீட்டர் தூரம்வரை இந்த மலை ரயில்பாதை அமைந்துள்ளது. 256 மேற்பட்ட வளைவுகள், 150-க்கும் மேற்பட்ட பாலங்கள், 16 சுரங்கங்கள், 6 ரயில் நிலையங்கள் என இந்த மலை ரயில்பாதை அமையப்பெற்றுள்ளது.
மேட்டுப்பாளையம், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பயணம் மேற்கொள்ளும்போது இயற்கை அழகை ரசிப்பதுடன் அருவி வனவிலங்குகளைக் கண்டு மகிழ்ச்சி அடைய முடிகிறது.
இந்நிலையில், மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருந்தார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமான நீலகிரியில் டிசம்பர் 31ஆம் தேதிமுதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மலை ரயில் இயக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இன்றுமுதல் நீலகிரி மலை ரயில் சேவை தொடங்குகிறது.