நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை 46.5 கி.மீ கொண்ட இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காண கிடைக்கின்றன. மலை ரயில் பயணத்தின்போது வனப்பகுதியில் பல வனவிலங்குகளும் தென்படுவது வழக்கம். இதனால் இவற்றை கண்டு ரசிக்கவும் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஒருவருக்கு ரூ.3000 கட்டணம் நிர்ணயம் செய்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் அதிகமானதை தொடர்ந்து தனியார் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பிறகு, ஏற்கனவே ரயில்வே மூலம் இயங்கி வந்த முன்பதிவு கட்டணத்துடன் ரயில்கள் தற்போது தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மீண்டும் அதே தனியார் நிறுவனம் சார்பில் மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளைகளை சேர்ந்த ஊழியர்கள் 150 பேர் வருகை தந்தனர். விமானத்தில் உள்ளவர்களைப் போன்று பணிப்பெண்கள் இந்த ரயிலிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நீலகிரியில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், குடிநீர் பாட்டில்களை ரயிலில் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியாருக்கு விடப்பட்ட மலை ரயில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது!