நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வேள்வி என்னும் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழில், கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்திவருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகே சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சீறிப்பாய்ந்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடுகளை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்றுள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தம் போட்டதும் சிறுத்தை ஆட்டினை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், இதுவரை, சிறுத்தை தாக்கி சுமார் 25-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இது குறித்து வனத் துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருவதாக தெரிவித்தனர்.
மேலும், ஆட்டை நம்பித்தான் தங்களது வாழ்வாதாரம் இருப்பதாகவும் சிறுத்தை ஆட்டை வேட்டையாடுவதை கண்கூடாக பல முறை பார்த்தாகவும் அவர்கள் கூறினார்கள். ஆட்டை தாக்குவதுபோல் நாளை எங்கள் குடியிருப்புக்குள்ளும் வர நேரிடும் என அச்சம் தெரிவித்த அவர்கள், அதற்குள் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்