மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலம் ஆகும். இதனால் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவில் புல்வெளிகள், வாகனங்களின் மீது உருவாகும் நீர்த்துளிகள், குறைந்த வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகளாக மாறிவிடும்.
அதிகாலை நேரங்களில் புல்வெளிகளை பார்க்கும்போது பனி உறைந்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழை காரணமாக, இரண்டு மாதங்கள் கழித்து தாமதமாக குளிர்காலம் தற்போது தொடங்கி உள்ளது. இதனால், இன்று உதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலை குந்தா, தீட்டு கல், கேத்தி ஆகியப் பகுதிகளில் உறைபனி பொழிவு காணப்பட்டது.
பச்சை புல்வெளிகளில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல புல்வெளிகள் பனி உறைந்து காணப்பட்டன. மேலும் கடுங்குளிர் நிலவத் தொடங்கி உள்ளதால், காலை 9 மணிக்கு மேல் தான், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடிகிற சூழ்நிலை உள்ளது.
இதேபோல, உறைபனி பொழிவு தொடர்ந்தால் காய்கறிகள், தேயிலை விவசாயம் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிர் காலம் தொடங்கியதை அடுத்து இன்று காலை குறைந்த பட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இதையும் படிங்க: உதகை மலர்க் கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடவும் பணி தொடக்கம்!