ஒரு வாரத்துக்கு முன்பு புளியம்பாறை பகுதியில் கணவன் மனைவி இருவரை யானை ஒன்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள சலுகையில் குறும்பர் காலணியைச் சேர்ந்த காளியக்கா என்ற மூதாட்டி நேற்று மாலை விறகு சேகரிப்பதற்காக அருகிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்று இரவு வரை அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காலையிலிருந்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மூதாட்டியின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் ஆங்காங்கே கிடந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், அங்கு நின்றிருந்த ஒன்பது யானைகளை விரட்டி காளியக்காவின் உடலைச் சேகரித்து உடற்கூறாய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கடந்த சில காலங்களாக யானைகள் அவ்வப்போது கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை உடைப்பதும், விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவதும், மனிதர்களைத் தாக்குவதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.