நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காற்றால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது. இதனையடுத்து உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய இன்னசன்ட் திவ்யா, பலத்த காற்றுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க மாவட்டத்தில் 45 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 280 முகாம்கள் ஏற்படுத்தபட்டிருப்பதாகவும் கூறினார்.
பொதுமக்கள் தங்களது வீடுகளை சுற்றி ஆபத்தான நிலையில் மரங்கள் இருந்தாலோ, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய வீடுகள் குறித்தும் 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.