வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக நாளை (நவம்பர் 25), நாளை மறுநாள் (நவம்பர் 26) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை இந்த இரு தினங்களில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழையும், பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் 42 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில், தயாராக இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 456 புயல் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.