நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் வியாபாரிகளும் பொதுமக்களும் வெங்காயத்தை கொள்முதல் செய்வதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான வெங்காயம் கர்நாடக மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு உதகை நகராட்சி தினசரி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் வெங்காயங்களை மூட்டை மூட்டையாக கடைகளில் அடுக்கி வைத்து மொத்த கொள்முதல் வியாபாரிகள் விற்பனை செய்துவந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் மொத்த கொள்முதல் செய்யும் வியாபார கடைகளிலும் குறைந்த அளவே வெங்காயங்கள் இருப்பு உள்ளன.
வரத்து குறைந்து காணப்படுவதால் உணவக உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.