சென்னை : வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட எல்லையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் தண்ணீர் பாட்டில்கள் கைப்பற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதேசமயம், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, அங்கு கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுவதில்லை என்றும், சுற்றுலா பயணிகள் தான் அவற்றை கொண்டு வருவதாகவும், அவற்றை பறிமுதல் செய்ய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க : குதிரை போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் ஊட்டி சிறுவன் - ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வம்