நீலகிரி: எமரால்டு ஊருக்கு அருகில் அவலாஞ்சி அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் மற்றும் அதன் கரையில் உயிரிழந்த நிலையில் இருந்த இரு புலிகள் குறித்து வனத்துறையினர் 20 பேர் கொண்ட குழு மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரை கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் எமரால்டு அணைப் பகுதியில் 8 வயது மற்றும் 3 வயது மதிக்கத்தக்க இரண்டு புலிகள் உயிரிழந்த நிலையில் இருந்தன. இந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த புலிகளின் உடல்களை கால்நடை மருத்துவக் குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது. இதில் புலிகளின் வயிற்றில் இருந்து திரவத்துடன் கூடிய முடிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 20 பேர் கொண்ட வனக் குழுவினர் புலிகள் இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் போது, புலி உடல்கள் இருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உயிரிழந்த நிலையில் இருந்த மாட்டின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு செய்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாதிரிகளை ஆனைக்கட்டி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையின் முடிவில் விஷம் தடவிய மாட்டினை உண்ட புலி இறந்திருப்பதாக கண்டறியப்பட்டது. அதனை அடுத்து, எமரால்டு கிராமங்களில் யாருடைய மாடு காணாமல் போயிருக்கிறது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையின் போது எமரால்டு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருடைய மாடு கடந்த 10 தினங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக சிலர் தெரிவித்து உள்ளனர். அதன் அடிப்படையில் சேகரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவருடைய மாடு பத்து தினங்களுக்கு முன்பு காணாமல் போனதைத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், "மாடு காணவில்லை என்று தேடிச் சென்ற பொழுது வனப்பகுதியில் உள்ள ஏதோ மிருகம் ஒன்று அந்த மாட்டை அடித்து கொன்று இருப்பதை அவலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் கால்வாய் அருகே கண்டதாகவும் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சேகர் உயிரிழந்த மாட்டின் மீது பூச்சிக் கொல்லி மருந்தினை தடவி விட்டு வந்ததாகவும் தெரிவித்ததாக" போலீசார் கூறினர். சேகரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: நடிகையின் ரூ.4 கோடி சொத்துகள் அபகரிப்பா..? காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!