மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். உதகை அருகே கல்லட்டி, தட்டனேரி பகுதிகளில் உள்ள ஒரு பிரிவினர் பிற்படுத்தப்பட்ட மக்களாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசு சார்பில் மலை வேடன் இனத்தவர் என பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மலை வேடன் என்ற சமுதாயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பவர்கள். இதற்கு நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் அந்த ஆறு பழங்குடியின மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதகையில் நேற்று நடைபெற்ற நீலகிரி பழங்குடியினர் சங்க கூட்டத்தில் ஆறு பழங்குடியினத்தவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, பழங்குடியினர் அல்லாதோருக்கு பழங்குடியினர் சலுகையை பெறுவதை தடை செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு மலை வேடன் என்று சான்றிதழ் வழங்கியதை திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் உல்லத்தி ஊராட்சித் தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து மலை வேடன் பழங்குடியினர் என சான்றிதழ் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக வரும் திங்கட்கிழமை அனைத்து பழங்குடியினத்தவரும் இணைந்து அடுத்த கட்ட முடிவை எடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படியுங்க:
'இது என்ன உதகையா..? காஷ்மீரா..? ஆத்தி என்னா குளுரு' - உறைபனி பொழிவால் அவதியுறும் மக்கள்