நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசுக்கு சொந்தமான டேன் டீ நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கரோனா பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் திடீரென நிரந்தர தொழிலாளர்கள் களப் பணிகளுக்கு மாற்றி, நூற்றுக்கணக்கான வெளியாட்களை பணிக்கு லாரி மூலமாக வரவழைத்த மேலாளரைக் கண்டித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு வந்த லாரியை தடுத்து சிறைப்பிடித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான அலுவலர்கள், தொழிலாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்துபவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் டேன் டீ நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. நியாயம் கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க...சரிவில் தொடங்கி ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!