நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலை பாதையில் பயணிக்கும் போது சில வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்துவருகிறது.
விபத்து ஏற்படும் போது வாகனங்களில் உள்ள ஹேர் பேக் ( பாதுகாப்பு பலூன்கள்) வெளியில் வராததே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களின் முன்புறம் கூடுதலாக பம்பர்கள் மற்றும் இரும்பு கிரில்களை பொறுத்துவதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது சென்சார் வேலை செய்யாமல் போவதாகவும், இதனால் ஏர்பேக் வெளியில் வந்து விரிவடைவதில்லை என்பதும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் வாகனங்களில் முன்புறம் தேவையற்ற பம்பர்கள் பொறுத்தி இருந்தால் அதனை அகற்றுவதுடன் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து முடிவு செய்தது. அதன் படி தற்போது உதகை - குன்னூர், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை என மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி பம்பர்களை பொறுத்தியுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது.
விபத்துகளின்போது உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.