நீலகிரி கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் நிகழ்ச்சிகளை நடத்தியதால் கரோனா பாதிப்பு இரு வாரங்களில் ஐநூறைக் கடந்துள்ளது. நிகழ்ச்சிகளை நடத்தினாலோ அல்லது அதிகளவில் கூட்டத்தைக் கூட்டினாலோ பேரிடர் மேலாண்மை சட்டப்படி ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கும், தகுந்த இடைவெளியை பின்பற்றாத தனிநபர், நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அனைத்து உள்ளாட்சிகளும் அபராதம் விதித்து வருகிறது. குன்னூர் நகராட்சியில ஆணையர் பாலு உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் ரகுநாதன் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மேற்பார்வையாளர் குப்புசாமி உள்பட நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள்.
கடைகளில் கிருமி நாசினி வைக்காமல் இருந்தால் 500 ரூபாயும், முகக்கவசம் அணியாமல் இருந்தால் 200 ரூபாயும் அபராதம் விதித்து வருகின்றனர். இதுவரையில், 4 நாட்களில் மட்டும் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.