நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும், தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யவும் பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகிறன. மேலும் தேயிலைத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை, தேயிலை வாரியத்தின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் வழங்கப்படுகிறன.
இந்நிலையில் தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளுக்கு சுமார் ரூ.4.46 கோடி மதிப்புள்ள மானியத்தொகை 1,344 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தேயிலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தேயிலை மறு நடவு போன்ற செயல்பாடுகளுக்கு 1,091 பயனாளிகளுக்கு ரூ. 2.10 கோடி வழங்கப்பட்டது. மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 132 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 29 லட்சம் வழங்கப்பட்டது.
நீலகிரி உபாசி அரங்கில் பயனாளிகளுக்கு மானியங்களை தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தேயிலை வாரிய துணைத் தலைவர் குமரன், தேயிலை வாரியத்தின் உறுப்பினர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கருகி வரும் தேயிலைத் தோட்டம்: வேதனையில் விவசாயிகள்!