நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் பல்வேறு இடங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லெவல் கிராசிங் அருகே இடைச்சேரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நோக்கில், வருவாய்த்துறையினர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
அந்த வகையில் நிலச்சரிவிலிருந்து காப்பாற்றும் அரிய வகை கிரிசோ போகன் நோடோலிபார்ப் புல் வகை உள்ளிட்டவற்றை குன்னூர் பகுதிகளில் நடவு செய்யும் பணியை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று குன்னூரை பசுமையாக மாற்ற ஜெயின் இளைஞர்கள் நல சங்கம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், இந்தப் பகுதியில் அரிய வகை மரங்களான ஜகரண்டா, போடோகார்பஸ் கோல்டன் சிப்ரஸ் உள்ளிட்ட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த மரக்கன்று நடவு செய்யும் பணியை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் தொடங்கிவைத்தார்.