நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பழமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள், நோய்வாய்பட்ட யானைகள், மனிதர்களைத் தாக்கும் காட்டு யானைகள் ஆகியவைகள் பிடித்துக்கொண்டு வரபட்டு பராமரிக்கபட்டு வருகின்றன. அது போன்ற 27 யானைகள் தற்போது இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கும்கி பயிற்சி அளிக்கப்பட்டுள்ள இந்த யானைகள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்வதற்கும், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டவும், உடல் நிலை பாதிக்கப்பட்ட யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தல், ஆட்கொல்லி யானைகளை பிடித்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வனத்துறை கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் இந்த முகாம் தமிழ்நாட்டில் சிறந்த கும்கி யானைகளைக் கொண்ட முகாம் என்ற பெயரை பெற்றுள்ளது.
இதனிடையே கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களுக்குப் பல முறை சென்று காட்டு யானைகளைப் பிடிக்க உதவியாக இருந்த முதுமலையின் இரட்டையர்கள் என்று அழைக்கப்படும் விஜய், சுஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் இன்று (மே 21) 50ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளன.
1970ஆம் ஆண்டு முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்த 'தேவகி' என்ற யானைக்கு ஒரே பிரசவத்தில் இந்த 2 யானைகளும் பிறந்தன. இரட்டை சகோதரர்களான இந்த யானைகள் பார்க்க ஒரே மாதிரி தோற்றத்துடன் உள்ளன. சுஜய் யானை கோவை மாவட்டம், சாடி வயல் முகாமிற்குச் சென்றபோது, காட்டு யானையுடன் சண்டையிட்டதில் அதன் வலது புற தந்தம் உடைந்தது.
பிரபல காட்டு யானைகளான விநாயகன், சின்னதம்பி, விஜய் ஆகிய காட்டு யானைகள் கூடலூரில் 5 பேரைக் கொன்ற சங்கர் உள்ளிட்ட காட்டு யானைகளைப் பிடிக்க பெரும் உதவியாக இருந்தன.
இந்த இரட்டையர்கள் இன்று 50ஆவது பிறந்த நாளில் அடி எடுத்து வைத்திருந்தாலும் கரோனா ஊரடங்கு காரணமாக பிறந்த நாள் கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.