நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் முருகன். இவர் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மனைவி வனிதா (34). இந்த சூழலில் குடும்ப தகராறு காரணமாக, வனிதா கடந்த 4ஆம் தேதியன்று இரவு தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த தகவலறிந்து, அருகில் உள்ளவர்கள் இவர்களை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நால்வரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனிதா உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக கூடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே வனிதாவின் கணவர் முருகன் கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.