நீலகிரி மாவட்ட வனத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்தை ஒட்டிய குடியிருப்புகளிலும் சுற்றுலாத் தளங்களிலும் நுழையும் குரங்குகள், பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
மேலும், குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் அதிகரித்துள்ளது. காயம்படும் குரங்குகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் ஊருக்குள் அட்டகாசம் செய்து பிடிபடும் குரங்குகளைப் பாதுகாக்கவும் குன்னூர் வண்டிச்சோலை வட்டப்பாறை வனத்தில் காப்பகம் அமைக்க வனத் துறை முடிவு செய்தது.
12 லட்சம் ரூபாய் செலவில் ஓராண்டு காலமாக பணிகள் நிறைவடைந்த நிலையிலும், தற்போதுவரை இம்மையம் திறக்கப்படாமல் உள்ளது. சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திவரும் குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடவும், குரங்குகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி அளிக்கவும் இம்மையத்தை விரைவில் திறக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.