நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் இன்று 26 வளர்ப்பு யானைகளுக்கான நல வாழ்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை செய்வதை காண்பதற்காக வந்த அமைச்சர் அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தான் அணிந்திருந்த தனது காலணியை கழற்ற வைத்தார்.
அத்தனை அரசு அலுவலர்கள் முன்பு பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பதால் காலணியை கழற்ற நேரிட்டது எனவும், தனது பக்கத்தில் அரசு உயர் அலுவலர்கள் இருந்ததால் அருகில் இருந்த சிறுவனை கழற்ற சொன்னதாக தெரிவித்தார்.
மேலும் அச்சிறுவனை தனது பேரனாக நினைத்தே தனது செருப்பை கழற்ற சொன்னதாகவும் எந்தவொரு உள்நோக்கத்துடனும் செய்யவில்லை, இச்சம்பவம் யாருடைய மனதை புண்படுத்தியிருந்தால் மிகுந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பழங்குடியின சிறுவர்களை அழைத்து செருப்பை கழற்றவைத்த அமைச்சர்