நீலகிரி: குன்னூர் அருகே கேத்தி கிராமத்தை அடுத்த அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளிலும் பணியாற்றியுள்ளாா்.
இதன் காரணமாக இவரது மகள் மீராவை தனது பணி மாறுதல் செல்லும் ஊா்களுக்கு எல்லாம் தன்னுடன் அழைத்துச்சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளாா். இவா் கோவையில் பணிபுரிந்தபோது, தனது மகள் மீராவை அங்குள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார்.
இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக அவர், கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தோ்வினை எழுதினார். அதில், மீரா கப்பல் படைக்கான பிரிவில் தோ்ச்சி பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த 6 மாத கால பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். இதன்மூலம், கப்பல் படையில் சப் லேபிடினண்ட் அலுவலராக (Sub Lieutenant Officer) பொறுப்பேற்கும் மிரா, இந்திய கப்பல் படை அலுவலராக தேர்வான "முதல் படுகர் இனப்பெண்" என்ற பெருமையை பெற்றுள்ளார்.
படுகர் இனத்தில் பிறந்த மீரா, தற்போது ஒருங்கிணைந்த ராணுவ தேர்வில் பெற்ற வெற்றியை அடுத்து நாட்டின் முக்கிய படைப் பிரிவுகளுள் ஒன்றான கப்பல் படை அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கானப் பயிற்சியை முடித்து நேற்று (மே 31) தனது சொந்த ஊரான அச்சனக்கல்லுக்கு திரும்பினார். அப்போது, மீராவுக்கு அங்குள்ள படுகர் இன மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது.
இதையும் படிங்க: விதைப்பு திருவிழா: படுகர் இன மக்கள் வழிபாடு