நீலகிரி: கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி, வாழைத்தோட்டம், பொக்காபுரம், மாயார் பகுதிகளில் வசிக்கும் கிராமத்தினருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மசினகுடி பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்குச்சென்று வர பெரும்பாலும் ஜீப் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வனத்துறை சார்பில், இந்தப் பகுதிகளை ஒட்டிய சாலைகளில் வணிகரீதியாக வாகனங்களை இயக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் மசினகுடியில் உள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட ஜீப் வாகன ஓட்டிகள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறையைக் கண்டித்து இன்று(ஆக.29) மசினகுடி பகுதியில் காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கறுப்புக்கொடி கட்டி கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. கொட்டும் மழையில் மசினகுடி பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறை அறிவித்துள்ள வணிகரீதியாக யாரும் சாலையைப் பயன்படுத்தக் கூடாது என்பது கண்டிக்கத்தக்க அறிவிப்பு எனவும்; முற்றிலும் தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக வனத்துறை ஒவ்வொரு செயல்களையும் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், ”மசினகுடிக்கு பிரதான சாலையாக இருக்கும் தெப்பக்காடு பகுதியில் பாலத்தை இடித்து, இதுவரை சீரான போக்குவரத்து இல்லாமல் பெரும்பாலான தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் வனத்துறை அறிவிக்கும் ஏதாவது ஒரு அறிவிப்பு இங்குள்ள மக்களை முற்றிலும் பாதிப்பதோடு, மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியையும் வனத்துறையினர் எடுத்துவருவது தொடர்ந்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தொடர் போராட்டங்கள் நடைபெறும்” என மசினகுடி ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கத்தினோம்..கேட்கவில்லை.. ஊட்டி தொட்டபெட்டாவில் பெண் தற்கொலை