உதகை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்து அதில் பயணம் செய்த முகமது ஷாரிக் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத சதி என கண்டறியப்பட்டது. இந்நிலையில் முகமது ஷாரிக் பயன்படுத்திய சிம்கார்டு கோவையில் வாங்கியது போலீசாருக்கு தெரியவந்தது. உதகையை சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் பெயரில் சிம்கார்டு பெறப்பட்டிருந்தது. சுரேந்திரனிடம் உதகை போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த இரண்டு நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு அவரது இல்லத்திற்கு வந்து சுரேந்தரை போலீசார் விடுவித்துள்ளனர். பின்னர் விசாரணை முடியும் வரை அவரது செல்போன் தங்களிடமே இருக்கும் எனவும், வெளியூருக்கு எங்கும் செல்ல கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.
குக்கர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக 60 மணி நேரத்திற்கு மேலாக சுரேந்தரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓரிரு நாளில் உயர்மட்ட விசாரணைக்கு மங்களூருவில் ஆஜராக வேண்டுமென சுரேந்தருக்கு சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் சுரேந்தர் விசாரணைக்கு மங்களூருக்கு செல்ல உள்ளதாகவும் அங்கு முகமது ஷாரிக் என்பவரை நேரில் அடையாளம் காண்பித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு; ஆதியோகி சிலைக்கு ஷாரிக் சென்றாரா..?