நீலகிரி: குன்னூர், கொலக்கம்பை அருகே கடந்த நான்கு நாள்களாக முகாமிட்டிருந்த யானைகள் தற்போது ஒற்றை யானை குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன.
இந்த யானைகள் முன்னதாக டெரேமியா கிராமத்தில் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்தன. தொடர்ந்து, மேலூர் அறையட்டி கிராமப் பகுதியில் இந்த யானைகள் முகாமிட்டிருந்தன.
இந்நிலையில், இந்தக் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (56) என்பவர் நேற்று (ஆகஸ்ட்.20) வெளியே சென்ற நிலையில் இரவு 9 மணி வரை வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் அப்பகுதியில் தேடியுள்ளனர்.
அப்போது, மேலூர் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் யானை மிதித்து லட்சுமணன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த குந்தா வனத்துறையினரும் கொலக்கம்பை காவல் துறையினரும் இறந்த லட்சுமணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
யானை தாக்கி லட்சுமணன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள்: வேன் கவிழ்ந்து விபத்து