நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் யானைகள் பராமரிப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு முகாமில் பணியில் உள்ள பாகன்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் உணவு, ஊட்டச்சத்து தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதோடு நடைப்பயிற்சிக்கும் அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (வயது 54) என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை மிகவும் அன்போது கவனித்துக்கொண்டார். காலை, மாலை இருவேளையும் மசினி யானைக்கு உணவு வழங்குவது, நடைப்பயிற்சி அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
அந்த வகையில், இன்று(ஏப்ரல் 28) காலை பாகன் பாலன், மசினி யானைக்கு உணவு தயாரித்த பிறகு அதனை எடுத்துக்கொண்டு யானையின் அருகே சென்று உணவு கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மசினி யானை பாகன் பாலனை தாக்கியதில், இதில் நிலைக்குலைந்த பாலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த பாகன் பாலனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம், உயிரிழந்த பாலனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறி உள்ளார்.