நீலகிரி: குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ முகாமில் நடந்தது. இதில், ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ. அருண் கலந்துகொண்டு, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "தீவினையாக விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் மீட்புப் பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகளை அடைத்தனர்.
விபத்து நடந்தவுடன் மக்கள் உடனடியாக விரைந்துசென்று உதவினர். உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எம்.ஆர்.சி. ராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டனர் அவர்களுக்கும் நன்றி" என்றார்.
மேலும் விபத்து நிகழ்ந்தவுடன் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, குமார் தலா 5000 ரூபாயை லெப்டினென்ட் ஜெனரல் ஏ. அருண் பரிசாக வழங்கினார். முன்னதாகத் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை குறித்து மு.க. ஸ்டாலினுக்கு ஏ. அருண் வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2001 நாடாளுமன்றத் தாக்குதல்: தலைவர்கள் மரியாதை